நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கி இருக்கிறார். பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் 2019 பிப்ரவரி 12 ஆம் நாளன்று புகார் அளித்தார்.

இந்தநிலையில், 2019 பிப்ரவரி 24 அன்று, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது .
சிறையில் அடைக்கப்பட்ட 9 பேர்:

பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு, அருளானந்தம், ஹரோன், பாபு, அருண்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டநிலையில், 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சாகும் வரை ஆயுள் தண்டனை; பொள்ளாச்சி வழக்கில் நீதிபதியிடம் தமிழக அரசு அதிரடி!
குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் மீதும் மொத்தம் 78 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
நீதிபதி நந்தினி தேவி:
இந்தநிலையில், இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி நந்தினி தேவி.

பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேர் மீது இருந்த 76 குற்றச்சாட்டுகளில் 66 குற்றாச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பதும், முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்து, சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பு வைத்த முக்கிய கோரிக்கை:
இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் சுந்தர மோகன் தெரிவித்திருந்தார்.
குற்றவாளி தரப்பு வழக்கறிஞர்:
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாண்டியராஜன், ''இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு முன் எங்கள் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் வேறு எந்த வழக்குகளும் இல்லை. இவர்கள் அனைவரும் இளைய வயதினர். இவர்களின் வயது, உடல்நிலை மற்றும் இவர்களின் வயதான பெற்றோரைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று கோரியுள்ளோம். '' என்றார்.

அதிரடி தீர்ப்பு:
9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவி, தண்டனை விவரத்தை தற்போது அறிவிக்கிறார். அதன்படி, 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை முழு விவரம்:
9 குற்றவாளிகள் யாருக்கு எவ்வளவு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என பார்க்கலாம். இந்த வழக்கில் சாகுமறை ஆயுள் தண்டனை என்பது அந்த ஒன்பது பேருக்கும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஐந்து ஆயுள் தண்டனை, மூன்று ஆயுள் தண்டனை 10 ஆயுள் தண்டனை என ஒவ்வொருவருக்குமான அந்த ஆயுள் தண்டனையின் கால அளவுகளும் மாறுபட்டிருக்கிறது.

முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு நான்கு ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசுக்கு ஐந்து ஆயுள் தண்டனை. ஏ3 குற்றவாளி சதீஷுக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் எட்டாவது குற்றவாளியான அருளானந்தம் மற்றும் ஒன்பதாவது குற்றவாளியான அருண்குமார் ஆகியோரு க்கு தலா ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. A4 குற்றவாளி வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள் தண்டனை, A5 மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள் தண்டனை, A6 பாபுவிற்கு ஒரு ஆயுள் தண்டனை, A7 ஹெரன்பால் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அபராத விவரம் மற்றும் இழப்பீடு:

முதல் குற்றவாளிஆன சபரிராஜனுக்கு 40 ஆயிரம், 2ம் குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு 30 ஆயிரத்து 500, 3வது குற்றவாளியான சதீஷுக்கு 18 ஆயிரத்து 500, 4வது குற்றவாளியான மணிவண்ணனுக்கு 18,000, 6வது குற்றவாளியான பாபுவிற்கு 10 ஆயிரத்து 500, 7வது குற்றவாளியான ஹெரன்பாலுக்கு 14 ஆயிரம், 8வது குற்றவாளியான அருளானந்தத்திற்கு 8 ஆயிரத்து 500, 9வது குற்றவாளியான் அருண்குமாருக்கு 8 ஆயிரம் அபராதமாக விதிப்பு.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - தண்டனை முழு விவரம் என்ன?