தமிழக அரசியல் களத்தில் தற்போது கவனம் பெற்றுள்ள இடைத்தேர்தல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தற்போது அதே தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட்டு மக்கள் வாக்குகளைப் பெற்று எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்து, மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலை சந்திப்பது சரியா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து திமுக தலையில் இறங்கும் பேரிடி... சேகர்பாபு, ஆ.ராசாவை அடுத்து சிக்கலில் சிக்கிய முக்கிய புள்ளி...!
அரசியல் காரணங்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் பதவியை ராஜினாமா செய்வதால் அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது என்ற விவகாரமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதுபோன்ற ராஜினாமாக்களால் உருவாகும் இடைத்தேர்தல் செலவை சம்பந்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்களிடமே வசூலிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குதிரை பேரம் மூலமாக அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக வாங்கிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, கட்சி மாறிகளுக்கு இடைத்தேர்தல் படிப்பினையாக இருக்கும் என்றும், மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். பொள்ளாச்சியில் இன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அதிமுக சார்பில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,தற்போது தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாகவும்,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, முதியோர்கள் கொலை அதிகரித்து உள்ளதாகவும்,காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் இன்ப சுற்றுலாவாக தமிழக முதல்வர் லண்டன் சென்றிருப்பதாகவும், ஏற்கனவே பழைய ஆட்சியில் உள்ள முதலீடுகளை திரும்பக் கொண்டு வருவதில் பயனில்லை எனவும்,மேலும் அதிமுக கட்சியில் இருந்து ஜெயித்து பின்பு ஆளுங்கட்சியின் சேர்ந்தவர்களுக்கு தமிழக மக்கள் இந்த இடைத்தேர்தலில் படிப்பினை புகட்டுவார்கள் எனவும் கட்சி மாறிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் வரலாற்றின் அத்தியாயம்... அண்ணா பிறந்த நாள் ... முதல்வர் விஜய் புகழாரம்.!