சென்னை, அக்டோபர் 10: 2025 மே மாதம் 7 அன்று பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' – பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக – இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பு திறனை உலகிற்கு நிரூபித்தது. இதில், பாகிஸ்தானின் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய விமானப்படை மற்றும் இராணுவ ஏர் பாதுகாப்பு அமைப்புகள் அழித்தன. இந்த வெற்றி, உள்நாட்டு ட்ரோன் தயாரிப்பை வேகப்படுத்தியது.
இப்போது, கருடா ஏரோஸ்பேஸ், ஏஸ்ட்ரியா போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கும் ட்ரோன்கள், விவசாயம், கண்காணிப்பு, பாதுகாப்பு, சரக்கு போக்குவரத்து துறைகளில் புரட்சி செய்கின்றன. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்த 'பிரசாந்த்' இலகு ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தொழில்நுட்ப சுயசார்பு, உலக நாடுகளின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது.
இந்த வளர்ச்சியை காட்சிப்படுத்தும் வகையில், சென்னை வர்த்தக மையத்தில் அக்டோபர் 8 அன்று தொடங்கிய 'ஏரோடிப்கான் 25' சர்வதேச வான்வெளி மற்றும் ராணுவ மாநாடு, இன்று (அக்டோபர் 10) முடிகிறது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: வீட்டு பெண்கள் தான் டார்கெட்! ஆன்மிக போர்வையில் களமிறங்கும் பயங்கரவாத அமைப்பு! உளவுத்துறை வார்னிங்!
ராணுவ விமானங்கள், ஸ்டார்ட்அப் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை முக்கிய இடம் பெற்றுள்ளன. இதில், சென்னை ஐ.ஐ.டி.யின் 'ட்ரோ லேப்' நிறுவனத்தின் புதுமென்பொருள் தொழில்நுட்பம் தனித்துவமாக விளங்கியது. இது, GPS சிக்னல் இன்றி ட்ரோன்களை பறக்க வைக்கும் சாதனையைச் செய்துள்ளது.
'ட்ரோ லேப்' நிறுவனத்தினர் தெரிவிக்கையில், "பொதுவாக ட்ரோன்கள் GPS தொழில்நுட்பத்தை சார்ந்தே இயங்குகின்றன. ஆனால், கிடங்குகள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் GPS சிக்னல் கிடைக்காது. இதைத் தீர்க்க, 'ரேடியோ மேப் எஸ்டிமேஷன்' தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இதில், வை-ஃபை சிக்னல்களைப் பயன்படுத்தி வரைபடத்தை உருவாக்கி, ட்ரோன்களை தானியங்கியாக இயக்கலாம். இது விரைவில் நடைமுறைக்கு வரும்" என்றனர்.

இந்நிறுவனம், 'ரூத்ரா எக்ஸ்', 'ரூத்ரா எஃப்.எக்ஸ்.' போன்ற ட்ரோன்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, 'ருத்ராஸ்ட்ரா' ட்ரோன், 60 கிலோ சரக்கை சுமந்து பறக்கும் திறன் கொண்டது. இதில், 'பாம் டிராபிக் மெக்கானிசம்' – துல்லிய ஏவுகணை தாக்குதல் – இணைக்கப்பட்டுள்ளது. இது 'தற்கொலை ட்ரோன்' என அழைக்கப்படுகிறது. எதிரிகளின் இருப்பிடத்தை குறிவைத்து, கீழிருந்தே கட்டுப்படுத்தி, வெடித்து அழிக்கும்.
இந்த ட்ரோன், விவசாயத்தில் உரம் தெளிப்பு, விதை தூவல், நில அளவீடு போன்றவற்றைச் செய்யும். போர்க்களத்தில், வீரர்களின் உயிரை காக்கும்; கண்காணிப்பு, ராணுவ தாக்குதல்களுக்கு ஏற்றது. சோலார் ஏரோஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் லிமிடெட் (SDAL) உருவாக்கிய இந்த ட்ரோன், ஜைசல்மேரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்திய இராணுவம், இதை பெரிய அளவில் வாங்க திட்டமிட்டுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற சம்பவங்கள், இந்தியாவின் சுய உற்பத்தி தொழில்நுட்பத்தை உலகளவில் புகழ்த்தியுள்ளன. இப்போது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்திய ட்ரோன்களை ஆர்வமுடன் வாங்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டம், ட்ரோன் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஏரோடிப்கான் 25' போன்ற மாநாடுகள், உள்நாட்டு ஸ்டார்ட்அப்களுக்கு உலக சந்தைக்கு வாய்ப்பளிக்கின்றன. அடுத்த ஆண்டுகளில், இந்திய ட்ரோன்கள் ராணுவம் மட்டுமல்லாமல், விவசாயம், பேரிடர் மீட்பு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் இந்திய பந்தாடிய பாக்., விமானங்கள்! பழுது நீக்கி தரும் அமெரிக்கா! சீனாவுக்கு முட்டுக்கட்டை!