திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே மின் தடை ஏற்பட்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்காமல் தவெக அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வருவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாடு மற்றும் தீவிர மின்தடை விவகாரம் தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், தலைநகர் சென்னை தொடங்கித் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகப் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக, முன்னறிவிப்பின்றி ஏற்படும் திடீர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் (Low Voltage) காரணமாகக் கோவை தொழிற்பேட்டைப் பகுதிகளில் மட்டுமே சுமார் ₹30 கோடி மதிப்பிலான நவீனத் தொழிற்சாலை எந்திரங்கள் பழுதடைந்து சேதமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் தொழில்துறையினரின் சுமார் ₹100 கோடிக்கும் கூடுதலான மின்னணு சாதனங்களும் தொழிற்கருவிகளும் பாழாகியுள்ளன என்று வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!
அரசின் விளக்கங்களை அப்பட்டமான பொய் எனச் சாடிய அவர், வழக்கத்தை விட மின்சாரத் தேவை அதிகரித்திருப்பதே தற்போதைய மின்தடைக்குக் காரணம் என்றும், வெளிச்சந்தையிலிருந்து 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு நிலைமை சீராகிவிட்டதாகவும் அரசுத் தரப்பில் பசப்பலான தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால், கள நிலவரத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை; தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளில் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் அடியோடு துண்டிக்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிப் பணிகள் நடைபெற்று வரும் முக்கியமான இத்தருணத்தில், மின்தடையால் மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயப் பெருமக்கள் கடுமையான கண்ணீருக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் இதற்குத் தீர்வு காண அரசுக்கு வழிகாட்டிய அவர், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையை விட உள்நாட்டு உற்பத்தியும் வழக்கமான கொள்முதலும் சேர்த்து 2000 மெகாவாட் குறைவாக இருப்பதே இந்த அவலத்திற்குப் பிரதானக் காரணமாகும். தேசிய மின் சந்தையிலும், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிலும் மின்சாரம் தாராளமாகக் கிடைக்கும் சூழலில், அதனை முழுவீச்சில் கொள்முதல் செய்வதற்கான உருப்படியான நடவடிக்கைகளை அரசுத் தரப்பு நிர்வாகம் முழுமையாக எடுக்கவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் அவர்களே நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய பிறகும் கூட, மின்வெட்டுப் பிரச்சனை தீராமல் தொடர்வது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகத் தோல்வியாகும். எனவே, தமிழ்நாடு அரசும் மின்சார வாரியமும் இனியாவது தூங்கி வழியாமல், போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நிர்மல் குமார் நிர்வாகத்தில் தடுமாறும் மின்சாரம்.. பகலிலும் பவர்கட்! தமிழக மக்கள் அவதி!!