தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மாலை நேரங்களில் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தென் மாநிலங்களில் மின் தேவை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மத்திய மின் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
தென் மாநிலங்கள் மொத்தம் 69,934 மெகாவாட்டில் இருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தில் மின் தேவை 19,679 மெகாவாட்டில் இருந்து 19,822 மெகாவாட்டாக உயர்ந்து, தென் மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு! வடகிழக்கு இளைஞர்களை அதிக அளவில் களமிறக்க திட்டம்!
ஆந்திராவில் 13,107 மெகாவாட்டில் இருந்து 14,011 மெகாவாட்டாகவும், தெலுங்கானாவில் 17,162 மெகாவாட்டில் இருந்து 18,548 மெகாவாட்டாகவும், கர்நாடகாவில் 18,395 மெகாவாட்டில் இருந்து 18,655 மெகாவாட்டாகவும், கேரளாவில் 5,334 மெகாவாட்டில் இருந்து 5,844 மெகாவாட்டாகவும் மின் தேவை அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் 483 மெகாவாட்டில் இருந்து 476 மெகாவாட்டாக சற்று குறைந்துள்ளது.

மத்திய மின் துறை, தமிழக மின்வாரியத்துக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கையில், அடுத்த மாதம் முதல் மாலை நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மின் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, பற்றாக்குறையை சமாளிக்க தேவையான மின் கொள்முதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.
கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் மின் தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் எச்சரிக்கை காரணமாக, மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி என்னை கட்டிப்பிடித்து அன்பு காட்டினார்!! மேற்குவங்க படகோட்டி பெருமிதம்!