அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளையும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என நீதிமன்றங்கள் முடக்கிப் போட்டால் வரும் காலங்களில் குற்றவாளிகள் தடயங்களை அழிக்கவும், தப்பித்துக் கொள்ளவும் மட்டுமே அவை வழி வகுக்கும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
• திமுக ஆட்சியில் நடைபெறும் அபரிமிதமான மணல் கொள்ளையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சமன் அனுப்பினால் மாநில அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு!
• கனிம வள கொள்ளையை ஆய்வு செய்யச் சென்றால் மாநில சுயாட்சியில் தலையீடு!

• ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்து, ஆயிரக்கணக்கான பெண்களை விதவைகளாக்கும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றால் மனித உரிமை மீறல்! மாநில அதிகாரத்தில் தலையீடு!!
• தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டுமெனில் மத்திய அரசு ஆதிக்கம் - இந்தி திணிப்பு!
• மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே தொகுதி எண்ணிக்கை குறைக்க மத்திய அரசு சதி என வானத்திற்கு பூமிக்கும் குதிப்பது! மத்திய அரசுக்கு எதிராக அணி திரட்ட பிற மாநிலங்களையும் தூண்டுவது!!
- இதைவே வாடிக்கையாகக் கொண்டு திமுக கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிமன்றங்களை அரசியல் தளங்களாகப் பயன்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழலோ ஊழல் என எங்கும் லஞ்சமும் லாவண்யமும் தலைவிரித்தாடுகிறது. குறைந்தது ஒரு துறையிலாவது அமலாக்கத்துறை விசாரித்து நியாயம் பிறக்குமா என்று தமிழக மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளோடு இருந்த நிலையில், மே மாதம் 20ஆம் தேதி 008048 / 008049 வழக்கு எண்கள் பதிவாகி 22 ஆம் தேதி தலைமை நீதிபதிக்கு முன்னர் வழக்கு கொண்டு வரப்பட்டு அமலாக்கத்துறை வாதாடுவதற்கு போதிய நேரம் கொடுக்காமலேயே, அதன் முழு விளக்கத்தையும் கேட்டறிவதற்கு முன்பாகவே ”இடைக்காலத் தடை” வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிமிடம் வரை இடைக்காலத் தடை ஆணை கொடுத்தற்கான காரணங்களைக் குறிப்பிட்டுத் தீர்ப்பு பதிவேற்றம் செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளைத் தீர்ப்பு போல சித்தரித்து கபட நாடகம் ஆடி, சுய விளம்பரம் தேடிக் கொள்கிறது.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கிறது திமுக அரசு.. ஊரக வளர்ச்சித்துறை விவகாரத்தில் அன்புமணி கடும் தாக்கு!

ஆட்சி - அதிகாரங்கள் கிடைத்தவுடன் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்டு மக்களைச் சுரண்டுவதையும், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதையும் பெரும்பாலான மாநில அரசுகள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து சாதாரண மக்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. மாநில அரசின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு பிரிவு ஒரு நாளாவது இது போன்ற ஒரு ஊழலையாவது தடுக்க நடவடிக்கை எடுத்ததுண்டா? அல்லது எடுக்கத்தான் முடியுமா? அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளையும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என நீதிமன்றங்கள் முடக்கிப் போட்டால் வரும் காலங்களில் குற்றவாளிகள் தடயங்களை அழிக்கவும், தப்பித்துக் கொள்ளவும் மட்டுமே அவை வழி வகுக்கும். மீண்டும் உண்மையை வெளிக்கொணர வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

இந்திய அரசியல் சாசனம் வெற்றுக் காகிதத்தால் ஆனதல்ல! அது கோடான கோடி மக்களின் உயிரோட்டம்; எண்ண பிரதிபலிப்பு; கொள்கை கோட்பாடு; நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றின் வெளிப்பாடு. இதைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றங்கள். ஆனால், நேர்மையற்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தண்டித்து ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக நீதிமன்றங்களை பயன்படுத்தியே குற்றம் புரிந்த அரசியல்வாதிகள் தப்பிப்பார்களேயானால், ஏழை எளிய மக்கள் எங்கே சென்று நீதியைப் பெறுவார்கள்? எப்படி நீதியை நிலைநாட்டுவார்கள்? ஊழல் வழக்குகளில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் மனசாட்சியோடும், மக்களோடும் இணைந்து இந்திய அரசியல் சாசனத்தின் மாண்பை உயர்த்தும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என என்பதே ஜனநாயகவாதிகள் அனைவரின் எண்ணமாக உள்ளது.
இவ்வாறு கிருஷ்ணசாமி அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்போ என்ன செஞ்சீங்க.? இப்போ என்ன செய்யுறீங்க.? திமுக அரசை போட்டு தாக்கிய பாலகிருஷ்ணன்.!