கோவையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை ஒதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை மேற்கு ஆசியாவில் குறிப்பாக அமெரிக்கா-ஈரான் மோதல் தொடர்பான போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிவாயு விநியோக சங்கிலி பாதிப்பால் உருவாகியுள்ளது.

இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட பல துறைகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. சில இடங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சம் பரவத் தொடங்கியது. கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!
பல்வேறு இடங்களில் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதியில் வணிக கியாஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கார்த்திக் கைது செய்யப்பட்டார். அங்கு, சுமார் 1000- க்கும் அதிகமான வணிக சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது சோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அனைத்து சிலிண்டர்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பிளாக்கில் சிலிண்டர் விற்பனை... அநியாய கொள்ளை..!! புலம்பித் தவிக்கும் வியாபாரிகள்..!!