மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையிலான நான்கு ஆண்டுகால போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
புடின் கூறுகையில், “உக்ரைன் தலைமை அமைதியான முறையில் மோதலைத் தீர்க்க விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என்றால், ரஷ்யா தனது இலக்குகளை ராணுவ நடவடிக்கை மூலம் அடையும்” என்று எச்சரித்துள்ளார். இந்தக் கருத்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை புளோரிடாவில் சந்திக்க உள்ள நிலையில் வெளியாகியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருகிறது. ஜெலென்ஸ்கி-டிரம்ப் சந்திப்பில் போர் முடிவுக்கான திட்டம், பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்டவை பேசப்பட உள்ளன. உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி வரும் நிலையில், ரஷ்யா நேற்று உக்ரைன் மீது சுமார் 500 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் கீவ் நகரில் பல இடங்கள் பாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாக்., சதி!! ஜார்ஜ் புஷ்ஷிடம் புதின் பேசிய ரகசியம்! 24 ஆண்டுகளுக்குப் பின் வெளி வந்த உண்மை சம்பவம்!

இத்தாக்குதலை “போரைத் தொடர விரும்புவதற்கான ரஷ்யாவின் உண்மையான அணுகுமுறை” என்று ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். ரஷ்ய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், உண்மையில் ஏவுகணைகளும் ட்ரோன்களுமே ரஷ்யாவின் பதிலாக உள்ளன என்று அவர் தெரிவித்தார். இத்தாக்குதல் புடினும் அவரது உள்குழுவும் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை என்பதை காட்டுவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்துவது உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜெலென்ஸ்கி-டிரம்ப் சந்திப்பு போரின் போக்கை மாற்றக்கூடிய முக்கிய நிகழ்வாக எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில், போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உலக நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்ப் அமைதி திட்டம் வேலைக்கு ஆகாது!! நிலத்தை விட்டுத்தர முடியாது! ஜெலன்ஸ்கி உறுதி!!