தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், மத்திய தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுத்ததால் படம் திரையரங்குகளுக்கு வரவில்லை.
இந்தச் சர்ச்சை தொடங்கியதுமே காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்டோர் படத்துக்கு ஆதரவாக பேசினர்.
இதற்கு தி.மு.க. அமைச்சர்கள் எஸ். ரேகா, பி.கே. சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போன்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தரப்பின் இந்த ஆதரவு தி.மு.க.வில் ஏற்கனவே சிறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் தமிழில் எழுதிய பதிவில்,
"ஜனநாயகன் படத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது, தமிழ் கலாசாரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் ஒருபோதும் வெல்ல முடியாது, மோடி" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த நேரடி ஆதரவு தி.மு.க. மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது த.வெ.க.வுடன் புதிய உறவு ஏற்படுமா? என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் முதல் மேல்நிலைத் தலைவர்கள் வரை பலரிடையே எழுந்திருந்தது. இந்நிலையில் ராகுலின் இந்தப் பதிவு குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் இந்த விவகாரம் பெரிதானபோது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "கூட்டணி குறித்தோ, தி.மு.க. உடனான உறவுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம்" என்று கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், தேசியத் தலைவர் ராகுல் காந்தியே நேரடியாக பதிவிட்டுள்ள நிலையில், தி.மு.க. தலைமைக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்தச் சர்ச்சை தமிழக அரசியலில் வரும் நாட்களில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: மக்களை சீரழிக்கும் இரட்டை இன்ஜின் ஆட்சி!! இது வளர்ச்சிக்கானதே அல்ல!! பாஜக மீது ராகுல் விமர்சனம்!