இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளையும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களையும் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமிடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பாக் நீரிணையில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் எல்லை தாண்டியதாகக் கூறி அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்கின்றன. இதனால், நாளொன்றுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்.. சாலை மறியலில் குதித்த உறவினர்கள்..!!
ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் ஜேசுராஜா தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 13-ல் கண்டன ஆர்ப்பாட்டமும், ஆகஸ்ட் 15-ல் உண்ணாவிரதப் போராட்டமும், ஆகஸ்ட் 19-ல் ரயில் மறியல் போராட்டமும் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, 80 மீனவர்கள் மற்றும் 237 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு 1974-ல் ஏற்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதன் மீறல்கள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென மீனவ சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!!