சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் சொந்தக் கட்சியினரே “குடைச்சல்” கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்பு ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இருந்தபோது கட்சி நிர்வாகிகள் எதிர்த்து பேச மாட்டார்கள்.
ஆனால் இப்போது “குட்டி ராஜாக்கள்” அதிகரித்து, சீட் கிடைக்காவிட்டால் சீறுவது, பதவி கிடைக்காவிட்டால் பக்கத்து கட்சிக்கு தாவுவது போன்ற காட்சிகள் அதிகரித்துள்ளன. இது அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இந்த அதிருப்தி தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் கோவையில் தனியாக கூட்டம் நடத்தி ஆலோசனை செய்தனர்.
இதையும் படிங்க: பாஜகவுல இருந்தா ஒண்ணும் கிடைக்காது! திமுகவுக்கு வாங்க!! அதிருப்தி அலையை பயன்படுத்தி வலை விரிக்கும் அமைச்சர்!
“அண்ணாமலைக்கு சீட் தரவில்லை என்றால், அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேலை செய்வோம்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் கட்டுக்கோப்பு மிக்க கட்சி என்று பெயர் பெற்ற பாஜகவிலேயே இப்படி கலகக் குரல் எழுந்தது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதிமுகவிலும் இதே நிலைதான். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், தனக்கு சீட் வாங்கித் தரவில்லை எனக் கூறி ஓபிஎஸ்ஸுடன் திமுகவில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா, தூத்துக்குடியில் பொறுப்பு கொடுக்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சீட் இல்லை என்றதும் அவரது அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.

திமுகவிலும் இந்த பிரச்னை தலைவலியாக மாறியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் சீட் கிடைக்காததால் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் கண்ணீர் விட்டு அழுதார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஒன்றிய செயலாளர் தனசேகரன், சீட் மறுக்கப்பட்டதால் ஆ.ராஜா எம்பியை பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் தி.நகர் எம்எல்ஏ கருணாநிதி ஆகியோரை ஆ.ராஜா எம்பி சந்தித்து சமாதானப்படுத்தி வைத்துள்ளார். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பாலு எம்பியை சந்தித்து அழுததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் த.மா.கா. கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலைக்கு பதிலாக தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கட்சியை விட்டு விலகினர்.
இப்படி ஒவ்வொரு கட்சியிலும் சில “குட்டி ராஜாக்கள்” செய்யும் அட்டகாசம், கட்சி தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு போல் கட்சியில் ஒற்றுமை இருந்த காலம் போய், தனிப்பட்ட அதிருப்திகள் பகிரங்கமாக வெளிப்படும் நிலை உருவாகியுள்ளது. இப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் கட்சிகளை நடத்துவதே கடினமாகிவிடும் என்று அரசியல்வாதிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உள் பூசல்கள், தேர்தல் முடிவுகளையும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சீட் தரலைனு குள்ளநரி வேலையை பாக்காதீங்க!! பதவி பறிகொடுக்க நேரிடும்!! மு.க.ஸ்டாலின் வார்னிங்!