சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ‘வாடகை காதலன்’ என்ற பெயரிலான டேட்டிங் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என ஹைதராபாத் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கவர்ச்சியான ஆண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி வெளியிடப்படும் இந்த விளம்பரங்களின் பின்னணியில் சைபர் குற்றவாளிகள் இருக்கலாம் என்றும், இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில விளம்பரங்களில், குறிப்பிட்ட கட்டணத்தில் ‘காதலனை வாடகைக்கு’ அழைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் ஜோடியாக காபி அருந்த ரூ.499 என்றும், சினிமாவுக்கு செல்ல ரூ.1,249 என்றும் வெவ்வேறு சேவைகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதியை முன்னிட்டு 50 சதவீத சிறப்பு தள்ளுபடி எனவும் சில விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தொடர்பான போலி வீடியோக்கள்!! மெட்டா இந்தியா தலைவர் மீது போலீஸ் வழக்கு! விசாரணை தீவிரம்!
இந்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அவற்றை உண்மையான டேட்டிங் சேவை என கருதி தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் அறிமுகமாகும் நபர்களுடன் தொடர்ந்து உரையாடி, பின்னர் நேரில் சந்திக்க செல்வது ஆபத்தானதாக மாறலாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். உரையாடலின்போது பெறப்படும் தொலைபேசி எண், தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்களை பயன்படுத்தி பின்னர் மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
காதல் அல்லது நட்பு என்ற பெயரில் நெருக்கத்தை ஏற்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது சைபர் குற்றவாளிகளின் வழக்கமான மோசடி முறைகளில் ஒன்றாக இருக்கலாம். எனவே, சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுமிகள் தொடர்பான விஷயங்களில் பெற்றோர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். குழந்தைகள் சமூக வலைதளங்களில் என்ன பார்க்கிறார்கள், யாருடன் தொடர்பில் உள்ளனர், வெளியே செல்லும்போது யாரை சந்திக்கின்றனர் என்பதை பெற்றோர் அறிந்திருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் அல்லது சைபர் மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக 1930 என்ற இணையக் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், cybercrime.gov.in வழியாகவும் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!