கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் சுமார் 40 கோடி ரூபாய் வரை ஊழல் மற்றும் நிதி முறைகேடு நடந்துள்ளதாகத் தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்துள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும் கோவை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், முந்தைய திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எந்தெந்த திட்டங்களில் எவ்வளவு கமிஷன் கிடைக்கும், எவ்வாறெல்லாம் ஊழல் செய்யலாம் என்று நாடி நரம்பெல்லாம் ஊழல் ஊறிப்போன கடந்த கால திமுக ஆட்சியின் மற்றொரு மாபெரும் ஊழல் முறைகேடு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்குப் போலி பில்கள் (Fake Bills) தயாரிக்கப்பட்டு, கோவை மாநகராட்சியின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது, பொதுமக்களின் வரிப்பணம் எந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட சில சுயநல கும்பலால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான சாட்சியாகும்.

மேலும், அந்தப் புகாரில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவலைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் செலவுகளுக்காக, ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்னதாகப் போடப்பட்ட நல்ல சாலைகளையே மீண்டும் தேர்வு செய்து, அதில் புதிய பணிகள் மேற்கொள்வது போலக் கணக்குக் காட்டி அதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக உள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..‘ என்னும் புரட்சித்தலைவரின் மக்கள் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. இந்த முறைகேடு குறித்து இன்றைய கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் விவாதம் எழுப்பப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!
தற்போதைய தவெக அரசின் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ள அவர், ஊழல் கறைபடியாத நேர்மையான ஆட்சி அமைப்பேன் என்று மக்கள் முன் உறுதி கூறிப் பதவியேற்றிருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களே, உங்கள் அரசு இந்த மெகா முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் எனக் கண்டறிய வேண்டும். இதற்குத் துணையாகப் போன அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகிய அனைவர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DVAC) மூலம் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முறைகேடாகச் சூறையாடப்பட்ட மக்களின் வரிப்பணத்தினை முழுமையாக மீட்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ள நிலையில், முந்தைய திமுக அரசின் மீதான இந்த 40 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்குத் தற்போதைய தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!