மாஸ்கோ: ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் பிளேக் நோய் பரவுவதாக வெளியாகி வரும் தகவல்கள் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு எந்தவிதமான பிளேக் தொற்று அபாயமும் இல்லை என்று ரஷ்ய சுகாதார அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
அதே நேரத்தில், பிளேக் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து முழுமையான தகவல்களை வெளியிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) வலியுறுத்தியுள்ளது.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பிளேக் நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 28 வயது பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கடுமையான நிமோனியா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அக்டோபர் 2-ம் தேதி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!
அவர் பணியாற்றிய நிறுவனம் பிளேக் உள்ளிட்ட ஆபத்தான தொற்றுநோய்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதால், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிமோனியா பிளேக் நோயின் நுரையீரல் பாதிப்பு வகையாக இருக்கலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 200 பேர் வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் ரஷ்யாவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor, இதுவரை நடத்தப்பட்ட விரிவான பரிசோதனைகளில் பிளேக் கிருமி இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பெண் பணியாற்றிய ஆய்வகத்தில் அவர் கையாண்ட நோய்க்கிருமிகளுடன் அவரது நோய்க்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவும், ஊடகங்களில் வெளியாகும் சில தகவல்கள் தவறானவை என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது பொதுமக்களுக்கு பிளேக் தொற்று பரவும் அபாயம் இல்லை.
ஆனால் இங்குதான் சர்வதேச அளவில் முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. அந்தப் பெண் உயிரிழந்ததற்கான துல்லியமான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை.
WHO-வின் தொற்றுநோய் மற்றும் பெருந்தொற்று மேலாண்மை பிரிவு அதிகாரி மரியா வான் கெர்கோவ், உயிரிழப்புக்கு காரணமான கிருமி எது என்பது தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றும், இதற்காக ரஷ்யாவிடம் கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், “ரஷ்யாவில் பிளேக் பரவுகிறது” என்பது தற்போது உறுதி செய்யப்பட்ட தகவல் அல்ல. ஆனால் மர்ம மரணத்துக்கான காரணம் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படாததால் சர்வதேச சுகாதார அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
தற்போதைய நிலையில் பீதி அடைய வேண்டிய அளவுக்கு பிளேக் பரவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், முழுமையான தகவல் வெளியாகும் வரை இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தில் நீடிக்கும்.
இதையும் படிங்க: மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?! உக்ரைனுக்கு ஆயுத உதவி கேட்டு ஜெலன்ஸ்கி அவசர அழைப்பு!