ஈரானில் தொடரும் உள்நாட்டு போராட்டங்களை பயன்படுத்தி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால், மத்திய கிழக்கு பகுதியில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் பேரழிவு ஏற்படும் என்று ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி இதுவரை 2,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் ஆட்சியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபப், அமெரிக்க அதிபர் டிரம்ப் அத்துமீறி செயல்பட்டால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு ஆதரவாக கத்தார் உள்ளிட்ட சில நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க: இஸ்ரேலை தொடர்ந்து சீண்டும் ஹமாஸ்! நிச்சயம் பதிலடி கொடுப்போம் - பிரதமர் நெதன்யாகு வார்னிங்!

இந்த சூழலில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் மிகத் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: “அமெரிக்காவின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஈரானின் உள்நாட்டு பிரச்னைகளில் வெளிநாடுகள் தலையிடுவது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது. தற்போதைய சூழலை பயன்படுத்தி, கடந்த 2025 ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது நடந்தால் மத்திய கிழக்கு பகுதியில் மட்டுமல்ல, உலக அளவில் பெரும் பேரழிவு ஏற்படும். அனைத்து தரப்பினரும் இதை உணர வேண்டும்.”
ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை, ஏற்கனவே பதற்றமான நிலையில் உள்ள மத்திய கிழக்கு பகுதியில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவுகள் இன்னும் சிக்கலாகும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: ஈரான் வன்முறையில் 646 பேர் பலி! டெஹ்ரானில் அதிகரிக்கும் பதற்றம்! அமெரிக்கர்களுக்கு பறந்த உத்தரவு!