தூய்மைப் பணியை தனியார்மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
திண்டிவனத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாமில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் வன்னியரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூய்மைப் பணியாளர்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைப்பதுடன், தாமே முன்வந்து இரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் வன்னியரசு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியாக இந்தச் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும். தூய்மைப் பணியைப் பொறுத்தவரை, அதனை எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தூய்மைப் பணி மேற்கொள்ளும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் அதனைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்புத் திட்ட முகாமில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஆ.ராசா: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சாடல்!