2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவில் இருந்து நடிகர் சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள கீதம் ஹாலில் அவர் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் அவரது எதிர்கால அரசியல் பாதை குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 மார்ச் மாதம் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். அப்போது அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது மனைவி ராதிகா சரத்குமார் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் பாஜகவில் இணைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் சரத்குமாருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பதவியோ, அரசியல் முக்கியத்துவமோ கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

தற்போது அதிமுக-பாஜக கூட்டணியில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியுள்ளன. அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் இன்னும் முடிவடையவில்லை. இந்தச் சூழலில் சரத்குமார் பாஜக மீது அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“இந்த முறை நான் நேரடியாகப் போட்டியிட விருப்பமில்லை. என் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன்” என்று சரத்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காதது அவரை அதிருப்தியில் தள்ளியுள்ளது.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சரத்குமாரின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள், “நாட்டாமை குடும்பம்” உறுப்பினர்கள் மற்றும் “சுப்ரீம் ஸ்டார் பேரவை” நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அவர் பாஜகவில் தொடரப் போகிறாரா அல்லது புதிய அரசியல் முடிவை அறிவிக்கப் போகிறாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலுக்கு முன்பாக சரத்குமாரின் அடுத்த நகர்வு தமிழக அரசியல் சமன்பாட்டை மாற்றக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!