நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாங்கள் எடுத்து வந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் திடீரென தாக்குதல் நடத்தியதில் 2 நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிப்பதாக சசிகலா தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் 9 நபர்கள் வரை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளதாகவும் வெளியான தகவல்களை சுட்டி காட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து இருப்பதையே இச்சம்பவம் காட்டுகிறது என்றும் இதுதான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம் எனவும் தெரிவித்த சசிகலா, இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக என்றைக்கு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதோ அன்று முதல் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டது என்றார். மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள டீக்கடைக்கு கூட செல்ல முடியாத வகையில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருப்பதாகவும், தமிழகத்தை ரவுடிகளின் ராஜ்ஜியமாக, போதை கூடாரமாக மாற்றிய பெருமை திமுகவையே சேரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப தப்பான முடிவு... திமுகவில் OPS... சசிகலா கடும் அதிருப்தி..!!
இந்த மக்கள் விரோத ஆட்சி என்றைக்கு தமிழகத்தில் இருந்து அகற்றப்படுகிறதோ அன்றுதான் மக்களால் சுதந்திரமாக வாழமுடியும் என்று கூறிய சசிகலா, தமிழக மக்களுக்கு தங்களது உயிர் வேண்டுமா அல்லது திமுகவினர் தேர்தலுக்கு முன்பாக தரும் 5,000 ரூபாய் போதுமா என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டதாகவும் திமுகவிற்கு சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலாவால் வந்த புது சிக்கல்... எக்குத்தப்பாய் சின்னம்மாவிடம் சிக்கிய எடப்பாடி... தலைகீழாய் மாறிய அதிமுக கணக்கு...!!