சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மார்ச் 23 ஆம் தேதி (இன்று) மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதை அடுத்து இவ்வழக்கு கடந்து வந்த பாதை,
19.6.2020:
ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இருவரின் மீதும் 312/2020 என்ற வழக்கை 188, 269, 294(b), 353, 506(ii) IPC ஆகிய 5 பிரிவுகளின்கீழ் பதிவு செய்தனர். மறுநாள் இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நடுங்க வைத்த சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு... கண்ணீருடன் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு வருகை..!!
23.6.2020:
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் இருந்தபோதிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் 5 மணி நேர இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 649/2020, 650/2020 என்ற குற்றவழக்கு, 176 (1)A என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டது. மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் சாத்தான்குளம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வர்த்தக அமைப்பினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேநாளில் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணையைத் தொடங்கினார்.
01.7.2020:
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சாத்தான்குளம் வழக்கைத் தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க துவங்கியது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். சி.பி.ஐ விசாரணைக்கு வருவதற்கு முன்பாக சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிடக் கூடும் என்பதால் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டனர். அதுவும், உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி சிபிசிஐடி போலீஸார் 01/2020, 02/2020 என இரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய வேகத்தில் எஸ்.ஐ ரகு கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
02.7.2020:
சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கிய இரண்டாவது நாள் அதிகாலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
03.7.2020:
மூன்றாவது நாள் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் முத்துராஜை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் சிறையில் அடைத்தனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேர் மீதும் Cr.No. 01/2020 u/s 176(1)(A)(i) Crpc மற்றும் 342,302,201 IPC என்ற வழக்கும் Cr.No. 02/2020 u/s 176(1)(A)(i) Crpc மற்றும் 342,302,201 IPC பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
07.7.2020:
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை 7-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஏற்றது. அதனால், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றஎண் 649/ 2020, 650/2020 அடிப்படையில் 176 ( 1) A பிரிவின்கீழ் சி.பிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. சிபிஐ பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் (RC.0502020S0009) சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் ஆகியவை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணை அறிக்கையை சிபிஐ வசம் ஒப்படைத்ததால் இனி முழுவீச்சில் விசாரணை தொடங்கப்பட இருக்கிறது
08.7.2020:
சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கிய மூன்று நாள்களில் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் 8-வது நாளில் சிக்கினார்கள். சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் என மேலும் 5 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 302, 201, 342, 107 IPC பிரிவுகளில் கொலைக் குற்றம், சாட்சியத்தை மறைத்தல், கொடும் செயல்புரிய உதவி செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரும் தற்போது சிறையில் உள்ளனர்
சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்
105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் இரண்டு கட்டமாக 2,427 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், தான் ‘அப்ரூவராக’ மாற விரும்புவதாகக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த கோரிக்கை சிபிஐ மற்றும் ஜெயராஜின் குடும்பத்தினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மதுரையில் உள்ள மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழக்கின் விசாரணை முடிவடையாதது ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது
ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 3 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க மதுரை நீதிமன்றதுக்கு உத்தரவிட்டது
இதுவரை இந்த வழக்கை 4 நீதிபதிகள் விசாரித்து உள்ளனர். தற்போது 5-வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத்துக்கு பொறுப்பு நீதிபதியாகவே இருந்து வருகிறார்.
அதே வேளையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேருக்கும் தனித்தனியாக 9 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 9 பேரும் தனித்தனியாக சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் 105 பேரிடமும் குறுக்கு விசாரணை மேற்கொள்வதால் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது
சாத்தான்குளம் தீர்ப்பு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும், காவல் துறையின் பொறுப்புணர்வையும் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு..! இன்றைய தினம் புதிய துவக்கம்... பியூஷ் கோயல் உற்சாகம்..!!