மதுரையில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவலியைத் தருகின்றது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று நடிகர்களைக் கொண்டு வெற்று விளம்பரம் செய்துவிட்டு, கல்விக்கண் திறந்த கடவுள் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தைச் செயற்பட முடியாதபடி முடக்குவது வன்மையானக் கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள காமராசர் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு அவருடைய நினைவாக 1978 ஆம் ஆண்டு காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. 18 பாடசாலைகளுடன், 72 திணைக்களங்களை கொண்டுள்ள இப்பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும், 7 மாலைநேரக் கல்லூரிகளையும் உறுப்பு கல்லூரிகளாகக் கொண்டுள்ளது என்று கூறினார். பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியையும் பெற்றுத் திகழ்வதோடு, 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இளம்பிள்ளைகள் உயர்கல்வி பயில வாய்ப்பளித்து பல இலட்சம் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது என தெரிவித்தார்.

அத்தகு சிறப்பு வாய்ந்த காமராசர் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாகக் கடும் நிதி நெருக்கடி காரணமாக முற்று முழுதாக முடங்கிப்போயுள்ளதுதான் பெருங்கொடுமை என்றும் காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தோத்ததுல கூட இவ்வளவு பெருமையா? - 134 தொகுதிகளில் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சீமான்... அவரே சொன்ன முக்கிய தகவல்..!
கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை., கடந்த 2007 மற்றும் 2008 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசால் பல்கலைகழகத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை 7 கோடியே 74 லட்சம்., அது கடந்த 17 ஆண்டுகளில் அதிகரித்து 2023-24 ஆம் நிதி ஆண்டுகளில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவைத்தொகை தமிழ்நாடு அரசால் தரப்படவில்லை என்றார். ஒருவேளை நிலுவைத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருந்தால் இன்றைய நாளில் 500 கோடி அளவிற்கு உபரித்தொகை பல்கலைக்கழகத்தில் கையிருப்பாக இருந்திருக்கும் எனவும் தணிக்கை அறிக்கை கூறுவதாக சீமான் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முற்று முழுதாகச் சீரழித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களை இத்தகைய மோசமான நிலையில் வைத்துவிட்டு கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என வீண் தற்பெருமை பேசுவது வெட்கக்கேடானது என சீமான் விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா? சும்மா பேசிட்டு இருக்காதீங்க..! சீமான் காட்டம்…!