அறந்தாங்கி அருகேயுள்ள காரணியாநேந்தல் கிராமத்தில் வசித்து வந்த 40 வயது பர்வீன் பானு என்ற பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு எதிராக, சமூக ஊடகங்களில் பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, பர்வீன் பானுவின் குடும்பத்திற்கு ஆதரவாகவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கோரியும் குரல்கள் எழுந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிப்பதாக தெரிவித்தார். கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளுடன், கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பர்வீன்பானுவை இழந்து, அவருடைய இரண்டு குழந்தைகள் தவித்து நிற்பது நெஞ்சைக் கனக்க செய்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாட முடியாத கொடுஞ்சூழலை ஏற்படுத்தி உள்ளதாகவும், கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் திமுக அரசின் காவல்துறை திணறி வருவது, மிகப்பெரிய பெருங்கொடுமை என்றும் கூறினார். பர்வீன்பானுவை கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், தாயை இழந்து கையறு நிலையில் தவிக்கும் தங்கை பர்வீன்பானுவின் மகள்கள் இருவருக்கும் அரசு வேலையும், உரிய துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: “மாமியாரின் 85 ஏக்கர் நிலத்திற்கு குறி” - சீமான் மீது வரதட்சணை புகார் - மாதர் சங்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
இதையும் படிங்க: திருட்டுப் பய கூட்டத்துக்கிட்ட நாட்ட கொடுத்தா திருடாம என்ன நடக்கும்? கொதித்தெழுந்த சீமான்..!