கடன் வாங்குவதே நாட்டின் வளர்ச்சி, அதற்கான வட்டி கட்டுவதே மக்களுக்கான நலத்திட்டம் என்று ஆட்சியாளர்கள் கட்டமைப்பது நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பெருந்துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லாது, நாட்டினை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விளம்பர அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை என்று சாடினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லாது வழக்கம்போல தமிழ்நாட்டை முற்று முழுதாக புறக்கணிக்கும் மற்றுமொரு ஏமாற்று நிதிநிலை அறிக்கையாகவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.

கடுமையான வரிகள் மூலம் நாட்டின் குடிமகனை வலுவற்றவனாக்கிவிட்டு, 'ஏழ்மையை ஒழிப்போம்' என்று நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் கூறுவது வேடிக்கையானது என்றும் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அரசின் வருவாயில் கோடிக்கணக்கான ஏழை தனிமனிதர்களை கசக்கிப் பிழிந்து பெறப்பட்ட வரி வருவாய் பங்கு 21% என்று பாஜக அரசு கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊடகத்தினருக்கே பாதுகாப்பில்ல... கொலைவெறி தாக்குதல்..! இந்த அரசு யாருக்கானது? சீமான் சரமாரி கேள்வி..!
பல்லாயிரம் கோடிகள் சலுகையின் மூலம் பல இலட்சம் கோடிகள் இலாபமீட்டும் பெருநிறுவனங்கள் தரும் வரிவருவாய் பங்கு வெறும் 18% மட்டும்தான் என்பதும், பொதுத்துறை நிறுவனங்களை திட்டமிட்டபடி தனியார் மயமாக்குவோம் என்பதும், இந்த அரசும், அதிகாரமும் பாமர மக்களுக்கானது அல்ல பெருமுதாலாளிக்கானது மட்டும்தான் என்பதை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிதிநிலை அறிக்கை, தனியார் பெருமுதலாளிகளின் வளவேட்டைக்கு நாட்டை தாரைவார்க்க அரசே எழுதி தந்துள்ள அதிகார சாசனம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்பத்தையே சிதைத்தக் கொடூரம்..! வன்கொடுமை செய்து குழந்தையை கொன்ற துணிகரம்... சீமான் கண்டனம்..!