கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய அடியாட்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராம பகுதியில் செயல்படும் கல்குவாரியில், சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக கனிமவளம் அள்ளப்பட்டு வருகிறது. நாள்தோறும் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்து, செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சியின் திருச்சி செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என சீமான் கூறினார்.

அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி முறைகேடாக கல்குவாரியை நடத்தும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிதான் தனது அடியாட்களுடன், அதிகார மமதையுடன் இக்கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஏன் உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பெரும் கொடுமை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடும்பத்தையே சிதைத்தக் கொடூரம்..! வன்கொடுமை செய்து குழந்தையை கொன்ற துணிகரம்... சீமான் கண்டனம்..!
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு முற்றுமுழுதாக சீரழித்திருப்பதாகவும் கள்ளச்சாராயம், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மணற்கொள்ளையை தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே மணல் கொள்ளையர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவங்களையும் சுட்டி காட்டினார். திமுக ஆட்சி மக்களுக்கானதா அல்லது கனிமவளக் கொள்ளையர்களுக்கானதா என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: பத்து வருஷ போராட்டம்... செவிசாய்க்காத திமுக அரசு.. மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க சீமான் வலியுறுத்தல்..!