பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன்னை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ஈழத்தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் பற்றியும், தமிழர் பண்பாட்டு பெருமைகள் குறித்தும் தன் பாடலின் மூலம் வெளிப்படுத்திய ஹிப்ஹாப் சங்கீத்சன்னை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
பயங்கரவாத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசு, ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு பயப்படுவது ஏன்? என்றும் கோயிலில் பாட்டு பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்படி? எனவும் கேள்வி எழுப்பினார்.

மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா என்று கேட்டுள்ள சீமான், கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அனுரா குமரா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா அரசிற்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா என்றும் இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும், லெனினும், ஹோசிமின்னும் தங்களுக்கு காட்டிய வழியா எனவும் சரமாரியாக சாடினார்.
அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலை போராட்டம்தான் அமைதிக்கு தடை என்று அழித்தொழித்த உலக நாடுகள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று கேட்டுள்ளார். எனவே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென சீமான் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!