சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் யசோதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பதிவு செய்தார். "பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். அதேநேரம், வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனச் சொல்லும் பிரதமர் மோடி, அதற்கு ஏன் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை?" எனத் தனது பேட்டியில் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், "பீகார் போன்ற மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதிப் பங்கீடு செய்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதனைத் தவிர்க்க, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டைப் பேசி முடித்தால் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இதனைத் தான் எங்களது மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதும் கட்சியின் வளர்ச்சிக்கான ஒரு முன்னெடுப்பே" என்றார். திருச்சி வேலுசாமி முன்வைக்கும் விமர்சனங்கள் அவரது சொந்தக் கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, "தமிழக முதலமைச்சர் இதுவரை 80 சதவீதத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் இந்த அரசு விரைவில் தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளனர். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது; வரும் காலங்களில் இந்தியாவை வழிநடத்தப் போவது இந்த கூட்டணி தான்" எனத் தீர்க்கமாகக் கூறினார். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் (SIR) தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING: விபத்துகளுக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்!” - அண்ணாமலை கடும் சாடல்!
இதையும் படிங்க: “பாஜகவிடம் மண்டியிடும் எடப்பாடி.. அதிமுக டெபாசிட் காலியாகும்!” - வெளுத்து வாங்கிய பெங்களூரு புகழேந்தி!