மும்பை: மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்புத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா உணவு பாதுகாப்புத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே பொறுப்பேற்ற பிறகு, உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் அளவு, உரிமையாளர் அல்லது அவர்களின் பின்னணி என எதையும் பொருட்படுத்தாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு பான் மசாலா நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய ஏலக்காய் பொருளுக்கான விளம்பரத்தில் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த விளம்பரம் தொடர்பாக தற்போது உணவு பாதுகாப்புத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் உத்தரவுக்குத்தான் திறக்கும்! அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் நேரடி பதிலடி
மாநிலத்தில் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருளுடன் தொடர்புடைய நிறுவனத்தை மறைமுகமாக விளம்பரப்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.

விளம்பரத்தில் ஏலக்காய் போன்ற சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் ஒரு பொருள் இடம்பெற்றிருந்தாலும், அதன் மூலம் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருளை நுகர்வோருக்கு மறைமுகமாக நினைவூட்டும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், விளம்பரம் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதா என்றும், தடை செய்யப்பட்ட பொருளை மறைமுகமாக ஊக்குவிக்கும் நோக்கம் உள்ளதா என்றும் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான சட்ட விதிகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். குறிப்பாக, சில விதிமீறல்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், விளம்பர நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பிரபல நடிகர்கள் நடித்த விளம்பரங்கள் தொடர்பாகவும் உணவு பாதுகாப்புத்துறை கடுமையான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: “Trump 2028” 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியா? ட்ரம்ப் சூசகம்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!