கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் (அவியன் இன்ஃப்ளூயன்சா) தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் அதிக அளவில் வளர்க்கப்படும் இப்பகுதிகளில் பறவைகள் திடீரென இறந்து வருவதால், இறந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் உயர் பாதுகாப்பு அவியன் இன்ஃப்ளூயன்சா (H5N1) வைரஸ் தொற்று உறுதியானது.
ஆலப்புழா மாவட்டத்தில் நெடுமுடி, செருத்தானா, கருவட்டா, கார்த்திகப்பள்ளி, அம்பலப்புழா தெற்கு, புன்னப்ரா தெற்கு, தகழி, புறக்காடு ஆகிய 8 பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு வார்டிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில் நெடுமுடியில் கோழிகளுக்கும், மற்ற பகுதிகளில் வாத்துகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் குருபந்தரா, மஞ்சூர், கல்லுபுரக்கல், வேலூர் ஆகிய இடங்களில் கோழிகள் மற்றும் காடைகளில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்! 12 மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்!
இதையடுத்து, கால்நடை பராமரிப்புத்துறை உடனடி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை மொத்தமாக அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் மட்டும் சுமார் 20,000 பறவைகள் அழிக்கப்பட உள்ளன. அழிப்பு பணிகள் டிசம்பர் 26-ம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிப்பு உள்ள இடங்களில் கோழி இறைச்சி, முட்டை, காடை இறைச்சி ஆகியவற்றின் விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் பரவுவதற்கு இடம்பெயரும் பறவைகள் காரணமாக இருக்கலாம் என்று கால்நடை பராமரிப்பு அமைச்சர் ஜெ. சின்சு ராணி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் இதே மாவட்டங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. பொதுமக்கள் நன்கு வேகவைத்த இறைச்சி மற்றும் முட்டையை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை மனிதர்களுக்கு தொற்று பரவியதாக தகவல் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அரையாண்டு விடுமுறை விட்டாச்சு! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்!