சென்னை, ஜனவரி 6: தமிழகத்தில் திமுக ஆட்சியின் கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆதாரங்களுடன் துறைவாரியான பட்டியலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் வழங்கினார். உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் (மக்கள் மாளிகை) ஆளுநரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் விவரங்களை ஆதாரங்களுடன் அடங்கிய மனுவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக அரசு ஊழல் செய்வதைத் தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதற்கு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 4 வருஷம் ஆச்சு?! திமுக எனக்கே ரூ.48,000 கொடுக்கணும்!! லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட துறைவாரியான ஊழல் பட்டியல் விவரம்:
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ.64,000 கோடி
- ஊரக வளர்ச்சித் துறை – ரூ.60,000 கோடி
- சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை – ரூ.60,000 கோடி
- எரிசக்தித் துறை – ரூ.55,000 கோடி
- டாஸ்மாக் துறை – ரூ.50,000 கோடி
- பத்திரப் பதிவுத் துறை – ரூ.20,000 கோடி
- நெடுஞ்சாலைத் துறை – ரூ.20,000 கோடி
- நீர்வள ஆதாரத் துறை – ரூ.17,000 கோடி
- சென்னை மாநகராட்சி – ரூ.10,000 கோடி
- தொழில்துறை – ரூ.8,000 கோடி
- பள்ளிக் கல்வித் துறை – ரூ.5,000 கோடி
- மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.5,000 கோடி
- வேளாண்மைத் துறை – ரூ.5,000 கோடி
- சமூக நலன் துறை – ரூ.4,000 கோடி
- உயர்க்கல்வித் துறை – ரூ.1,500 கோடி
- இந்து சமய அறநிலையத் துறை – ரூ.1,000 கோடி
- ஆதிதிராவிடர் நலத் துறை – ரூ.1,000 கோடி
- சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை – ரூ.750 கோடி
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை – ரூ.500 கோடி
- சிறைத் துறை – ரூ.250 கோடி
- பால்வளத் துறை – ரூ.250 கோடி
மொத்தம் – ரூ.4 லட்சம் கோடி.
இந்தக் குற்றச்சாட்டுகள் திமுக அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அதிமுக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தரப்பில் இதுவரை இதற்கு அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியிடப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “திமுக ஒரு கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. ஊழல் பணத்தை மீட்டெடுத்தால் பல திட்டங்களை செயல்படுத்த முடியும்” என்றார். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய், அமித் ஷா போனில் வாழ்த்து! பிறந்தநாளில் கனிமொழி சர்ப்ரைஸ்!! அரசியலில் புதுரூட்டா?