பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (Kempegowda International Airport) கொரிய நாட்டைச் சேர்ந்த 32 வயது இளம் பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விமான நிலைய ஏர் இந்தியா SATS (கிரவுண்ட் ஹேண்ட்லிங்) ஊழியரான 25 வயது முகமது அஃபான் அகமது (Mohammed Affaann Ahmed) என்பவரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி நடந்தது. கொரியாவில் இருந்து சுற்றுலா வந்த அந்த பெண், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து திரும்பி செல்ல தயாரானார். குடியேற்றத் துறை (இம்மிக்ரேஷன்) மற்றும் சிஐஎஸ்எஃப் (CISF) சோதனைகளை முடித்துவிட்டு விமானத்திற்கு செல்லும் போது, அஃபான் அகமது அவரை அணுகினார். "உங்கள் சரக்கு பையில் சப்தம் வருகிறது, கூடுதல் சோதனை தேவை" என்று கூறி, "மேனுவல் ஃப்ரிஸ்கிங்" (தனிப்பட்ட உடல் சோதனை) செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் அவரை ஆண்கள் கழிப்பறை அருகே உள்ள தனி இடத்திற்கு அழைத்துச் சென்று, மார்பு பகுதியை பலமுறை தொட்டு, உடல் சோதனை என்ற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பெண் எதிர்ப்பு தெரிவித்ததும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். உடனடியாக பெண் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களிடம் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: ரூ. 15,000 கோடி நஷ்டம்!! அகமதாபாத் விமான விபத்தால் தத்தளிக்கும் ஏர் இந்தியா! ஆண்டறிக்கையில் தகவல்!

புகாரின் அடிப்படையில் கெம்பேகவுடா விமான நிலைய காவல்துறை (KIA Police) வழக்குப்பதிவு செய்து, அஃபான் அகமதை கைது செய்தது. அவர் ஏர் இந்தியா SATS நிறுவனத்தில் கான்ட்ராக்ட் அடிப்படையில் பணியாற்றிய கிரவுண்ட் ஸ்டாப் என தெரியவந்தது. அவரை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு, பெண்கள் பயணிகளுக்கு உள்ள அச்சுறுத்தல் ஆகியவை குறித்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சிஐஎஸ்எஃப் சோதனைக்குப் பிறகு தனியார் ஊழியர்கள் பெண்களை தனியாக அழைத்துச் செல்வது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. விமான நிலைய நிர்வாகம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING : தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!