சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் பகுதியில் அதிகாலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஒரே நேரத்தில் குவிக்கப்பட்டு நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகளை குறிவைத்து நடைபெற்ற இந்த சோதனையில், சிறிய அளவிலான கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் கஞ்சா பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சோழிங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் வாடகை வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் தங்கி வருகின்றனர். இந்த பகுதிகளில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் சிறப்பு சோதனை நடத்த முடிவு செய்தனர்.
இதன்படி, காவல் துணை ஆணையர் ரகுபதி தலைமையில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலை நேரத்தில் சோழிங்கநல்லூர் பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் 11 குழுக்களாக பிரிந்து, கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம்! 'நான் இன்ஸ்பெக்டர்' என மிரட்டிய போலீஸ் அதிகாரி கைது!
முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்த சோதனையின்போது, குடியிருப்புகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா, அவற்றை பயன்படுத்துவதற்கான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த நடவடிக்கை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில் சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா பயன்படுத்துவதற்கு உபயோகிக்கப்படும் சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த அளவு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த கூடுதல் விவரங்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து செம்மஞ்சேரி உதவி ஆணையர் கூறுகையில், சோழிங்கநல்லூர் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் தடுக்கும் நோக்கில் இந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். கல்லூரி மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அதிகாலை நேரத்திலேயே குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஒரே நேரத்தில் பல வீடுகளில் சோதனை நடத்தியதால், சோழிங்கநல்லூர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!