வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ஐ முன்னிட்டு, சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து இந்த முகாம்களை ஏற்பாடு செய்துள்ளன. இந்த சிறப்பு தீவிர திருத்தம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும், முழுமையாகவும் புதுப்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, டிசம்பர் 19, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் குறைபாடுகள், தவறுகள், இல்லாத பெயர்கள் போன்றவற்றை சரிசெய்ய இந்த கட்டத்தில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முதலில் ஜனவரி 18 அல்லது 19 வரை முடிவடைய இருந்த இந்த கோரிக்கை தாக்கல் காலம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சென்னையில் இந்த இரு நாட்கள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது கடைசி கட்ட வாய்ப்பாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... ரொம்ப முக்கியம்..! வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்...!
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தகுதியுடைய குடிமக்கள் தங்கள் பெயரை சேர்க்க, ஏற்கனவே உள்ள பெயரை நீக்க, முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்யலாம். பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 (Form 6), நீக்க விரும்புவோர் படிவம் 7 (Form 7), திருத்தங்கள் செய்ய விரும்புவோர் படிவம் 8 (Form 8) ஆகியவற்றை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: என் பேரு எங்கய்யா? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட முதியவர்...!