தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தி, மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக எம்பி திருச்சி சிவா எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் இந்த முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சிக் காலத்தில் தமிழக ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியில் 8 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 19 புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் சுமார் 500 கி.மீ வரையிலான புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் மத்திய அரசால் வழங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு மொத்தம் 4,612 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படும் நிலையில், முந்தைய திமுக அரசு அதில் வெறும் 26 சதவீதமான 1,178 ஹெக்டேர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்திக் கொடுத்துத் திட்டங்களைத் தாமதப்படுத்தியது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முந்தைய திமுக அரசைப் போலக் கண்மூடித்தனமான மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுக்குத் தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையாகத் துணை நிற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாஜகவின் இந்த அறிக்கை தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? கொந்தளித்த ஆர்.எஸ் பாரதி..!!