108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், ‘பூலோக வைகுண்டம்’ என்று பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் இன்று அதிகாலை கோலாகலமாகத் திறக்கப்பட்டது.
ரத்தின அங்கி மற்றும் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் ஜொலித்த நம்பெருமாள், லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ரெங்கா... ரெங்கா...’ என எழுப்பிய விண்ணதிரும் பக்தி முழக்கங்களுக்கு இடையே பரமபதவாசல் வழியாகப் பிரவேசித்தார். கடந்த 19-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிய இந்த மகா உற்சவம், இன்று முதல் ராப்பத்து உற்சவமாகத் தொடர்கிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கித் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பகல்பத்து உற்சவத்தின் 10-ஆம் நாளான நேற்று, நம்பெருமாள் ‘நாச்சியார் திருக்கோலம்’ எனும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். அதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறப்பு இன்று அதிகாலை அரங்கேறியது.
இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு: ஆர்ப்பாட்டத்தில் மதுபோதையில் தள்ளாடிய காவலர் - சக போலீசார் அதிர்ச்சி!
இன்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, தனுர் லக்னத்தில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை மற்றும் வைர அபயஸ்தம் எனப் பலகோடி மதிப்பிலான திருவாபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தைச் சுற்றி வந்தார். சரியாக அதிகாலை 5.45 மணிக்கு, வேத விற்பன்னர்கள் சூழ நம்பெருமாள் பரமபதவாசல் வழியாகக் கடந்து வந்தபோது, அங்குத் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “ரெங்கா, ரெங்கா... வெங்கடா பிரபு... கோவிந்தா, கோவிந்தா...” எனப் பக்திப் பெருக்கோடு முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, நம்பெருமாள் ‘திருக்கொட்டகை’ பிரவேசம் கண்டு, பக்தர்களுக்கு நேரடியாகக் காட்சி தந்து அருள் பாலித்தார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளைத் தரிசிக்கத் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சேவித்தனர். இன்று இரவு 11 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை சாதிக்கும் நம்பெருமாள், நள்ளிரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்களுடன் மூலஸ்தானம் சென்றடைவார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் திருவிழா நிகழ்வுகள் மற்றும் பக்தர்களின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைத் திருச்சி மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செய்துள்ளது.
இதையும் படிங்க: “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!