தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடதமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... வங்கக்கடலில் அதிரடி மாற்றம்...அடுத்த 24 மணி நேரத்தில் வருகிறது அடுத்த ஆபத்து...!
இதன் காரணமாக சென்னை ,கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் கடலில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் தென் தமிழக மீனவர்கள் கட்டாயம் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பகீர் அலர்ட்... வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?