மாநகரப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், பணியின் போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாகப் பேருந்துகளை ஓட்டும் போது ஓட்டுநர்கள் அலைபேசியில் பேசுவதும், சமூக வலைதளங்களைப் பார்ப்பதும் அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்த நிலையில், பயணிகளின் உயிரைப் பணயம் வைக்கும் இத்தகையச் செயல்களைக் கட்டுப்படுத்த போக்குவரத்துத் துறை இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது பயணத் தேவைகளுக்காக மாநகரப் பேருந்துகளைச் சார்ந்துள்ளனர். இந்தச் சூழலில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காகச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) இன்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவது சாலைப் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது மட்டுமின்றி, பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை! போக்குவரத்துத் துறை புதிய உத்தரவு!
இந்த உத்தரவின்படி, பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போனில் பேசுவதோ அல்லது இயர்போன் (Earphone) அணிந்து கொண்டு இசை கேட்பதோ கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உடனடி இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேருந்துப் பணிமனை மேலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பயணிகளிடமிருந்து வரும் புகார்களை உடனுக்குடன் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சில ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசலில் இருக்கும் போதோ அல்லது சிக்னல்களில் காத்திருக்கும் போதோ செல்போனைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது கவனச்சிதறலை ஏற்படுத்தி உயிரிழப்பு விபத்துகளை உண்டாக்குவதாகப் புகார்கள் குவிந்தன. இதனைக் கருத்தில் கொண்டே, 'பணியின் போது செல்போன் இல்லா பயணம்' என்பதை உறுதி செய்ய எம்.டி.சி நிர்வாகம் இந்தச் சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. இந்த உத்தரவு சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அருகே பயங்கர விபத்து: கார் - அரசுப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி!