தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு அன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணியுடன் அமைதியாக நிறைவடைந்தது. இதில் தோராயமாக 84.69 சதவீதம் முதல் 84.98 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2011ஆம் ஆண்டின் முந்தைய அதிகபட்ச சதவீதமான 78.29ஐ விடவும், 2021ஆம் ஆண்டின் 73.6 சதவீதத்தை விடவும் புதிய உச்சமாகும்.
கரூர் மாவட்டத்தில் 91.92 சதவீதம் வரை உயர்ந்த வாக்குப்பதிவு நிலவரம் பதிவாகியிருந்தது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தல், எந்தவித பெரிய வன்முறையும் இன்றி நடைபெற்றது. அதேநேரத்தில், மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான இரண்டு கட்டத் தேர்தலின் முதல் கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

மாலை 6 மணி நிலவரப்படி 92.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இரவு 9 மணிக்கு இது 92.31 சதவீதமாக உயர்ந்தது. இது அம்மாநிலத்தின் சுதந்திரத்துக்குப் பிறகான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதமாகும். தக்ஷின் தினஜ்பூர் போன்ற இடங்களில் 94.87 சதவீதம் வரை வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!
தமிழ்நாடு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதிக சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது சிறப்பான ஒன்று என்று பாராட்ட தெரிவித்துள்ளார். ஒரு இந்திய குடிமகனாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் கூறியிருக்கிறார். மக்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தும் போது அது ஜனநாயக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம் தெரிவித்தார். எஸ் ஐ ஆர் தொடர்பான சில மனுக்களின் மீதான விசாரணையின் போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலையே ரத்து பண்ணனும்..! சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல்..! அரசியல் கட்சிகளுக்கு ஷாக்..!!