கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
விசாரணையின் போது கேரள தேர்தல் ஆணையம் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 24 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நீக்கம் குறித்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும், நீக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் பலரது வாக்குரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கோர்ட்டில் வாதிட்டனர்.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டில் புதிய திருப்பம்!! முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் அதிரடி கைது! பரபரப்பு!

இந்த வாதங்களை கவனமுடன் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், கேரள தேர்தல் ஆணையத்தை கடுமையாக அறிவுறுத்தினர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நபர்களின் பெயர்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை உடனடியாக பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டனர்.
மேலும், நீக்கப்பட்டவர்கள் தங்கள் முறையீட்டை அல்லது ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு வசதியாக மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதற்கான பரிந்துரையை தேர்தல் ஆணையம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவு கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு தங்கள் வாக்குரிமையை மீட்டெடுக்கும் வாய்ப்பை வழங்கும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்?