தமிழக சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையைச் சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி அதிமுகவைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. எனினும், பின்னர் அதிமுக தலைமை அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, 21 எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளைச் சபாநாயகர் முடிவுக்குக் கொண்டுவந்து கைவிட்டார்.

சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து பி.வி. செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லி மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் தனித்துவமான சூழல்களைக் கருத்தில் கொண்டு சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேவேளையில், இத்தகைய கட்சித் தாவல் மற்றும் கொறடா உத்தரவு விவகாரங்களில் எழும் சட்ட ரீதியான முக்கியக் கேள்விகள் குறித்துப் பொருத்தமான நேரத்தில் பின்னர் முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெளிவுபடுத்தினர்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்குகள்..! உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.! சிக்கலில் தேர்தல் ஆணையம்..!!