பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய பகுதிகள் ரெட் ஜோன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்ட கலந்தாய்வுக் கூட்டம், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் ஏ. அமல்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
ஆணையாளரின் உத்தரவின்படி, கூடுதல் ஆணையாளர்கள், இணை மற்றும் துணை ஆணையாளர்கள், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, கமாண்டோ பிரிவு மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

பிரதமர் பயணிக்கவுள்ள சென்னை விமான நிலையம், போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம், கோட்டூர்புரம் - சென்னை ஐ.ஐ.டி வளாகம், நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகம், கிண்டி மக்கள் பவன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், அவர் பயணிக்கும் முக்கிய வழித்தடங்களில் தீவிர சோதனைகளும் கண்காணிப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் வி.வி.ஐ.பி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அரசு ஏற்பாடுகளைத் தவிர ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்கவிட முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியுள்ளனரா என போலீசார் தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்களிலும் துணைப் படைகளுடன் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!