திண்டுக்கல்லில் நண்பரின் திருமண விழாவிற்கு இன்று 25.03.26 வருகை தந்த நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் வி சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் படிப்பை விடவும் ஒழுக்கத்தை பார்த்துக் கொள்வதே வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதை விட கலாசாரத்தையும், ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டும். நாம் செய்யும் தவறுக்கு அரசை குறை சொல்லக்கூடாது. அதேபோல சினிமா நடிகர்களை திரையில் நடிகர்களாக மட்டும் பார்க்க வேண்டும். அவர்களை புத்திசாலிகளாக நினைத்தால் அது உங்களை ஏமாற்றி விடும். சினிமாவே பொய்யான விஷயம். சினிமாக்காரர்களின் பின்னால் ஓடுவதை நிறுத்த வேண்டும்.
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.,வெற்றிபெற்று 7வது முறையாக ஆட்சி அமைக்கும். 2வது முறை முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார். 160 இடங்களுக்கு மேல் தி.மு.க.,வெற்றி பெறும். தேர்தல் அறிக்கயைில், இலவசங்களை அறிவித்திருக்கும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிதான், செலவுகளை சரிக்கட்ட வரியை ஏற்றுவோம் என பேசினார். ஆனால் தி.மு.க.ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பலன் கிடைத்திருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், குடும்பப் பெண்கள் என அனைவரும் பலன் அடைந்துள்ளனர். அடித்தட்டு மக்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக முடியும் என இந்த அரசு நிரூபித்துள்ளது.
தி.மு.க. இதுவரை செய்த நலதிட்டங்களை போல், இனி அ.தி.மு.க. செய்யமுடியாது. அ.தி.மு.க.வால் முடியவில்லை என்றால் வேறு எந்த கட்சியும் செய்யாது. நடிகர் விஜய் வாய்க்கு வந்ததை தேர்தல் அறிவிப்புகளாக உளறியிருக்கிறார். சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து கொள்ளாமல் தி.மு.க., தீயசக்தி என கூறுகிறார். அவரின் பிரசாரக் கூட்டத்தில், கோவிலுக்கு நேர்ந்து விட்டது போல் தொண்டர்களை பலி கொடுத்துக்கொண்டே போகிறார். அவர் கட்சியில் வந்து சேர்கிறவர்கள் எல்லோருமே, மற்ற கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர்கள், அங்கு ஆதாயம் இல்லாமல் வந்து சேர்ந்தவர்கள். இந்தக்கட்சியின் வேட்பாளர்கள், அ.தி.மு.க.,விற்கு கிடைக்கும் ஓட்டுகளை பிரித்து அவர்களை வெற்றிவாய்ப்புகளை பறிப்பார்கள்.
இதையும் படிங்க: எலக்ஷன் வந்தாச்சு..!! விஜய் படத்தின் டிரைலர் கூட திரையிடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்..!!
பா.ஜ. பாறாங்கல்லை போன்றது. அந்த கட்சியை கட்டிக்கொண்டு யார் வேண்டுமானாலும் குதிக்கலாம், பாறாங்கல்லிற்கு எதுவும் ஆகாது. அதைக்கட்டிக்கொண்டு குதிப்பவருக்குத்தான் சேதம். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.ஆட்சி நடத்துகிறது. பா.ஜ. ஆட்சி சிறுபான்மையினருக்கு எதிரான தவறான விஷயம். கோயிலுக்கு செல்பவர்கள் ஒரு கட்சியாகவும், கோவிலுக்கு செல்லாதவர்கள் மற்றொரு கட்சியாகவும் இங்கு இல்லை. பக்தி என்பது தனி மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையேயான விஷயம். இதில் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து அரசியல் செய்யக்கூடாது.
ரயில் பயணம், தற்போது விமான பயணம் போல மாறிவிட்டது. பா.ஜ., நாட்டுக்காக செய்கிறோம் என சொல்கிறார்களே தவிர, அடித்தட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஓட்டுப்பதிவு முடிந்து மே 2க்குள் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு ரூ.10, காஸ் ரூ.50 மத்திய அரசு விலை உயர்த்தும். அவர்களுக்கு தமிழக தேர்தல் எல்லாம் பொருட்டே இல்லை. மத்தியில் ஆட்சிக்காக தேர்தல் நடப்பதே முக்கியம். இனி மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வருவது கஷ்டம். தே.மு.தி.க.வுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 5 ஆயிரம் ஓட்டுகள் இருக்கும் வலிமையான கட்சி. தேர்தல் வெற்றி, தோல்வி விகிதம் குறைந்த அளவு ஓட்டுக்களில்தான் இருக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., பங்கு முக்கியம். தி.மு.க.,தீயசக்தி என சொல்பவர்களுக்கு அதைத்தவிர வேறு வார்த்தை தெரியாது.
எல்லோர் வீட்டிலும் விஜய் உள்ளார். ஆனால் அவர்களுக்கு எல்லாம் 18 வயது ஆகவில்லை என்பதே வருத்தமான விஷயம். உளறலின் உச்சக்கட்டமாக அரசியலே தெரியாமல் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால் கைதட்டல் வேண்டுமானால் வாங்கலாம். ஆனால் ஓட்டு விழாது. தாய்மார்களுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி அவர்களின் பணத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு கிடையாது. எந்த வீட்டில் அப்பா, அம்மா பணத்தில் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் பிள்ளைகள் இருக்கிறார்களா அவர்களே த.வெ.க.வில் உறுப்பினராக உள்ளனர். அவர்களுக்கு மாவட்டம், நலத்திட்டங்கள் என எந்த விஷயமும் தெரியாது.
மக்கள் சிந்தித்துப் பார்த்து ஓட்டு போடவேண்டும். அளவுக்கு அதிகமாக நேர்மையாக இருந்ததால்தான் என்னை எல்லாக் கட்சியிலும் இருந்து நீக்கினார்கள். தி.மு.க.வின் ஆதரவாளராக பிரசாரம் செய்வதையே பெருமையாக கருதுகிறேன். ராமருக்கு அணில் உதவியது போல தி.மு.க., வெற்றிக்கு நான் உதவுவேன். கூட்டணி இடஒதுக்கீட்டில், மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளும் வேண்டாம் என சொன்னது பெருந்தன்மையானது. 2 வாரத்திற்கு முன் சட்டசபையில் முதல்வரை புகழ்ந்து பேசிய வேல்முருகன், தொகுதி பங்கீட்டில் கூடுதலான தொகுதி இல்லை என தெரிந்ததும் திட்டி பேசுகிறார். சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதே வேல்முருகன் செய்த சாதனை. ராமதாசுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் சண்டை உள்ளது. ஆனால் தந்தையை அவமரியாதை செய்யும் மகனை யாருமே மதிக்க மாட்டார்கள்.
நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தேர்தலில் மாம்பழ சின்னம் முடக்கப்படும். எனவே, அவர்கள் பா.ஜ.சின்னத்தில் போட்டியிடலாம். சட்டம், ஒழுங்கு, பாலியல் குற்றங்களை யோசித்துப் பார்க்க வேண்டும். சுதந்திரம், பாதுகாப்பு இரண்டுமே வேறு. முதலில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். விசாரணை கைதிகள் மரணம் தொடர்பான விஷயத்தில் சில போலீசார் மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
அந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட போலீசை சஸ்பெண்ட் செய்யவதற்கு பதிலாக, டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என நிரூபித்த பின் பணியில் சேர்க்கவேண்டும். உலகத்தில் மற்ற நாடுகளில் இருக்கும் அதே சட்டங்கள் தான் நமக்கும் இருக்கிறது. ஆனால் தண்டனைகள் மாறுபடுகிறது. தண்டனைகள் கடுமையாகும் போதே குற்றங்கள் குறையும்.
நம்மை நம்பி வரும் பெண்களுக்கு நாம்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எல்லா வேலையும் போலீஸ் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. இந்தியாவில் 1500 பேருக்கு ஒரு போலீஸ் உள்ளது. அதுபோல் அதிகமான பாலியல் குற்றங்கள் பா.ஜ. ஆளும் மாநிலங்களில் நடப்பதாக பா.ஜ. ஆதரவாளர் ரங்கராஜ் பாண்டேவே கூறியிருக்கிறார். தமிழகத்தில் தற்போது, பா.ஜ.நிர்வாகி கரு.நாகராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. டில்லியை ஆட்சி செய்யும் யாருமே தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது. அது அமித்ஷா அல்லது அதற்கு மேலானவர்களாக இருந்தாலும் இங்கே நடக்காது.
விஜய், அ.தி.மு.க., பா.ஜ. உள்பட கட்சிகள் மீது சிறுபான்மையினருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட விஜய் பாண்டிச்சேரியில் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
இவர் எப்படி சிறுபான்மையினர் நலன் பற்றி பேசுவார். மக்கள் யாருக்கெல்லாம் ஓட்டு போடக்கூடாது என தீர்மானம் செய்தால் அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க. என எதற்கும் ஓட்டு போட முடியாது. விஜய்க்கு ஓட்டளிப்பது எதற்குமே பிரயோஜனம் இல்லாதது’ என பேசினார்.
இதையும் படிங்க: வெறித்தனம்... வெறித்தனம்..!! நாளை மறுநாள் TVK வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் விஜய்..!!