சென்னை: தமிழகத்தின் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் வகையில், மேலும் 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEx), தமிழக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் வாயிலாக இந்த 5 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பன்றிமலை காபி, கடலூர் காராமணிக்குப்பம் கருவாடு, தஞ்சாவூர் கும்பகோணம் டிகிரி காபி, நீலகிரி நெய் மற்றும் மதுரை பாலமேடு பால்கோவா ஆகியவை தற்போது GI குறியீட்டுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தூத்துக்குடி மரக்கடை தொழிலாளி கொடூரக் கொலை! மனைவி உள்பட 3 பேர் கைது! விசாரணையில் பகீர்!
ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியின் தனித்துவம், பாரம்பரியம் அல்லது தயாரிப்பு முறையுடன் தொடர்புடைய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அந்தப் பொருளின் குறிப்பிட்ட பிராந்திய அடையாளத்துக்கும் பாரம்பரிய தயாரிப்பு முறைக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும்.

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு பாரம்பரிய பொருட்களுக்கு GI குறியீடு கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மேலும் பல உள்ளூர் தயாரிப்புகளை அடையாளப்படுத்தி, அவற்றுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்பாக செட்டிநாடு கைமுறுக்கு, சீடை, ராமநாதபுரம் பனை கருப்பட்டி, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டரை கருவாடு உள்ளிட்ட பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு கிடைப்பதால் அந்தப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் தனித்துவமான அடையாளம் கிடைப்பதுடன், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக பாரம்பரிய உணவுப் பொருட்களை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பு உருவாகலாம்.
அதேவேளையில், GI குறியீடு கிடைத்துவிட்டாலே ஏற்றுமதி தானாக அதிகரிக்கும் என்பது உறுதியல்ல. தரம், உற்பத்தி அளவு, பேக்கேஜிங், விலை, சந்தைப்படுத்துதல் மற்றும் தொடர்ந்து ஒரே தரத்தை பராமரிப்பது போன்றவை முக்கியமானவை. இவற்றை முறையாகச் செய்தால் தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரிய சந்தையை உருவாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை! உயிரிழப்பு 16,000-ஐ கடந்தது – “இனி நிலைமை இன்னும் மோசமாகும்!”