சென்னை: சென்னை துறைமுகத்தை சர்வதேச அளவிலான மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களை கையாளும் முக்கிய துறைமுகமாக மாற்றும் வகையில் ரூ.17,500 கோடி மதிப்பில் வெளித்துறைமுக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சென்னை துறைமுக தலைவர் சச்சின் குர்வே தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசிய அவர், சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டார். கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் மொத்தம் 5.8 கோடி டன் சரக்குகளை கையாண்டதாகவும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.4 சதவீத வளர்ச்சி என்றும் தெரிவித்தார்.
மேலும், துறைமுகத்தின் கன்டெய்னர் கையாளும் திறனும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக 19.4 லட்சத்துக்கும் அதிகமான கன்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்த போலீஸ் தர்மராஜ் உயிரிழப்பு! ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!
வருவாயிலும் சென்னை துறைமுகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவாக ரூ.1,185 கோடி மொத்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ரூ.17,500 கோடி மதிப்பில் வெளித்துறைமுக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்களையும் கையாளக்கூடிய சர்வதேச துறைமுகமாக சென்னை துறைமுகம் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை அருகே உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகமும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளை கடந்துள்ள இந்த துறைமுகம் தற்போது நாட்டின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த நிதியாண்டில் 1,008 கப்பல்கள் மூலம் 4.9 கோடி டன் சரக்குகளை எண்ணூர் காமராஜர் துறைமுகம் கையாண்டுள்ளது. இதே காலகட்டத்தில் ரூ.1,250 கோடி வருவாய் ஈட்டியதுடன், வரிக்கு முந்தைய லாபமாக ரூ.924 கோடியையும் பதிவு செய்துள்ளது.
மேலும், துறைமுகத்தின் ஆண்டு சரக்கு கையாளும் திறன் தற்போது 6.7 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, தமிழகத்தின் தொழில் மற்றும் ஏற்றுமதி கட்டமைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது