தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இடைத்தேர்தல் என்றாலே பொதுவாக ஆளும் கட்சிக்கே சாதகமாக முடிவுகள் அமையும் என்ற கருத்து தமிழக அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் தேர்தல் வரலாற்றை பார்க்கும்போது, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன.
கடந்த கால இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என்ற எண்ணமும் நிலவி வந்தது.
ஆனால் தற்போதைய இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுக்கப்பட்டதாக பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கூறப்படுவதால், முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ராகுலுக்கு நோ... மோடிக்கு ஓகே! முதல்வர் விஜய்யின் அரசியல் நகர்வால் காங்கிரசில் அதிர்ச்சி? பரபரக்கும் அரசியல்!
2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இதற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. அப்போது ஆளும் அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி, சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், 2019-ம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும் என்ற கருத்துக்கு எதிரான முடிவும் பதிவானது.
இதற்கு முன்னதாக 1999-ம் ஆண்டு நத்தம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் திருவட்டாறு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹேமச்சந்திரன், திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.
2004-ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கணேசன், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். 1991-ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் செல்வராசன் வெற்றி பெற்றார்.
இதனால், நாளை வெளியாக உள்ள இரண்டு தொகுதிகளின் முடிவுகள் ஆளும் கட்சிக்கா அல்லது எதிர்க்கட்சிகளுக்கா சாதகமாக அமையும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? 2 இடைத்தேர்தல் முடிவை எதிர்நோக்கும் கட்சிகள்! நாளை ரிசல்ட்!