×
 

"போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறை செல்ல நேரிடும் என பள்ளி மாணவர்களிடம் பேசிய அரியலூர் எஸ்.ஐ சுமதி, 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில், "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறை செல்ல நேரிடும்" எனத் தவறான தகவலைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அரியலூர் 'சிங்கப்பெண்' படை பெண் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) சுமதி அப்பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, சாதாரணக் காவல் நிலையப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்காகக் காவல் துறை சார்பில் 'சிங்கப்பெண்' என்ற சிறப்பு விழிப்புணர்வுக் குழு இயங்கி வருகிறது. இக்குழுவின் சார்பில் உள்ளூர் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பெண் உதவி ஆய்வாளர் சுமதி, மாணவர்களிடம் போக்சோ (POCSO) சட்டம் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "பள்ளிகளில் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள், சக மாணவிகளுடன் சாதாரணமாகப் பேசினாலே அல்லது பழகினாலே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறைக்குச் செல்ல நேரிடும்" எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்த உரை தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

இதையும் படிங்க: "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்குத் தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

சட்டத்தின் நோக்கத்தையே தவறாகச் சித்தரித்து, மாணவர்களிடையே தேவையற்ற பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசிய காவல் துறை அதிகாரியின் இந்த உரைக்குச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், "குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பில் இருக்கும் போலிஸாருக்கே போக்சோ சட்டம் குறித்த தெளிவான புரிதல் இல்லையா?" எனப் பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில், விழிப்புணர்வுப் பணியில் பொறுப்பற்ற முறையில் தவறான தகவல்களைப் பேசியதற்காக, 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து உதவி ஆய்வாளர் சுமதி உடனடியாக விடுவிக்கப்பட்டார். மேலும், அவர் சாதாரணக் காவல் நிலையப் பணிக்கு (Station Routine Duty) மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share