திருவள்ளுவர் திருநாள்! துரைமுருகன், இறையன்பு, யுகபாரதிக்கு விருது! முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் சமூக நீதிக்காக பல்லாண்டுகளாக அயராது உழைத்து வரும் தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு (2026) திருவள்ளுவர் திருநாள் (ஜனவரி 16) நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதாளருக்கும் ரூ.5 லட்சம் பணம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.
முக்கிய விருதாளர்கள் விவரங்கள்:
- அய்யன் திருவள்ளுவர் விருது (2026): மு.பெ. சத்தியவேல் முருகனார் - 1,400-க்கும் மேற்பட்ட தமிழ்மறை குடமுழுக்குகள் நடத்தியவர். திருக்குறளின் அறக்கருத்துகளை சைவ சித்தாந்தத்துடன் செந்தமிழில் அழகாக விளக்குபவர்.
- தந்தை பெரியார் விருது (2025): வழக்கறிஞர் அ.அருள்மொழி - சுயமரியாதை, சமூகநீதி, பெண் விடுதலை, பெரியாரியல் மற்றும் பாவேந்தர் கவிதைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
- அண்ணல் அம்பேத்கர் விருது (2025): சிந்தனைச்செல்வன் - அம்பேத்கரின் சமநீதி, அரசியலமைப்பு, சமூகநீதி கோட்பாடுகளை ஆழமாகவும் அழகாகவும் பேசுபவர்.
- பேரறிஞர் அண்ணா விருது (2025): அமைச்சர் துரைமுருகன் - 1965 மொழிப்போராட்டத்தில் பங்கேற்றவர். 10 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
- பெருந்தலைவர் காமராஜர் விருது (2025): எஸ்.எம். இதயத்துல்லா - அனைத்து சமய இலக்கியங்களையும் ஒப்பிட்டு உரையாற்றும் சிறந்த பேச்சாளர்.
- மகாகவி பாரதியார் விருது (2025): கவிஞர் நெல்லை ஜெயந்தா - கவிதை, உரைநடை, பத்திரிகை, பதிப்பு என பன்முகத் தமிழ்த் தொண்டாற்றுபவர்.
- பாவேந்தர் பாரதிதாசன் விருது (2025): கவிஞர் யுகபாரதி - 2,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியவர். மரபு, புதுக்கவிதை, நவீனக் கவிதை அனைத்திலும் சிறந்து விளங்குபவர்.
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (2025): வெ.இறையன்பு - எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர், முன்னாள் தலைமைச் செயலாளர். தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளராகவும் பணியாற்றியவர்.
- கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2025): சு.செல்லப்பா - பள்ளித் தலைமையாசிரியராக புதுமையான கல்வி முறைகளை அறிமுகப்படுத்தியவர்.
- முத்தமிழறிஞர் கலைஞர் விருது (2025): விடுதலை விரும்பி - எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர். பன்முகத் தமிழ்த் தொண்டாளர்.
இவ்விருதுகள் தமிழ் மொழியின் வளர்ச்சி, சமூக நீதி, பண்பாட்டு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அர்ப்பணித்துள்ள தலைசிறந்த ஆளுமைகளை போற்றும் வகையில் வழங்கப்படுகின்றன. திருவள்ளுவர் திருநாள் விழாவில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் இவற்றை வழங்கி சிறப்பிக்கிறார்.
இதையும் படிங்க: பொங்கலோ பொங்கல்!! மோடி முதல் சிங்கப்பூர் பிரதமர் வரை!! தமிழில் வாழ்த்து சொன்ன உலகத் தலைவர்கள்!
இதையும் படிங்க: அண்ணாமலை தனி ஆளில்ல!! தமிழ் தேசியத்தின் மகன்!! தாக்கரே சகோதரர்கள் மிரட்டலுக்கு சீமான் பதிலடி!!