×
 

வாக்குறுதியை நிறைவேற்றுங்க... சட்டம் ஒழுங்கை சீராக்குங்க! தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

மின்வெட்டுப் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி நிபந்தனைகளைக் கண்டித்துத் தேமுதிக தலைமையகத்தில் 5 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (DMDK) மாவட்டக் கழகச் செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமையகமான ‘கேப்டன் ஆலயத்தில்’ இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து தவெகஅரசுக்கு எதிராக 5 மெகா அதிரடித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அதன் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் முழுமையானதாக இல்லாததால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பு தங்களது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க, இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் முன் உச்சபட்ச தண்டனைகளை விரைந்து வழங்கி, கடுமையான சட்ட நடவடிக்கைகளைத் தவெக அரசு எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: மதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகத் தினந்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இக்கொடூர மின்வெட்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமன்றி, மாணவர்களின் கல்வி, தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் யாவும் பெரிதும் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளன. இதனால் மக்களிடையே பெரும் அதிருப்தியும் கவலையும் நிலவுகிறது. எனவே, தமிழக அரசு இந்த மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு தேடாமல், நிரந்தரத் தீர்வு கண்டு தடையற்ற மற்றும் சீரான மின்விநியோகத்தை மாநிலம் முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு முழுமையாகக் கைவிட வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சிக்காமல் நடுநிலையுடன் செயல்பட்டு, இரு மாநிலங்களுக்கிடையில் எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் உரிய அழுத்தம் கொடுத்துத் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்தக் கடைகள் உண்மையாகவே மூடப்பட்டுள்ளனவா அல்லது இன்னும் மூடப்படாமல் கள்ளச்சந்தையில் (பிளாக் மார்க்கெட்) மதுபான விற்பனை நடைபெறுகிறதா என்பதை அரசு உரிய முறையில் கள ஆய்வு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மேலும் பல டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட அரசு உடனடியாகப் பல்லாயிரக்கணக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share