தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!
ஆனால் இப்போதைய ஆட்சி தாய் மாமன் தங்க மோதிரம் மற்றும் அண்ணன் சீர் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் துறைமுகம் மேற்குப் பகுதியில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் மற்றும் அண்ணன் சீர் திட்டங்களை கடுமையாக விமர்சித்தார்.
பெண்கள் யாருடைய கையையும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது என்ற திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை வலியுறுத்தினார். “சீரே எங்களுக்கு வேண்டாம். பெண்களுக்கு சொத்துகளில் சம உரிமை, கல்வி, வருமான வாய்ப்பு ஆகியவை உள்ளன. சம்பாதித்து தலைநிமிர்ந்து நில்லு என்று திமுகவும் திராவிட இயக்கமும் கற்றுத் தந்தன. ஆனால் இப்போதைய ஆட்சி தாய் மாமன் தங்க மோதிரம் மற்றும் அண்ணன் சீர் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.
ஒரு கிராம் தங்க மோதிரத்தால் குழந்தைக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான மருந்துகள் இல்லை, போதிய மருத்துவர்கள் இல்லை என்ற நிலையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை தங்க மோதிரம் வாங்கச் செலவிடுவது கேடுகெட்ட ஆட்சி” என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மேயர் பிரியா மீதான தாக்குதல்..!! முதல்வர் அனுமதிப்பது ஏன்..? கனிமொழி எம்பி கேள்வி..!
தவெக அரசு ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் 22 காரட் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 28 அன்று மதுரையில் தொடங்கி வைத்தது. ஆண்டுக்கு சுமார் 755 முதல் 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கப்படும் என்றும், அதற்கு 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழி மேலும் பேசுகையில், “நாங்கள் பெண்கள் மற்றவர்களுக்கு சீர் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மற்றவர்களிடம் போய் சீர் வாங்கச் சொல்வது பழைய நிலைக்குத் திருப்புவதாகும். பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே உருவாக்க வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் போதனை. அண்ணா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் வழங்கிய இந்த உரிமைகளை அடித்து நொறுக்கி, பெண்களை 200-300 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இது உள்ளது” என்றார்.
முதலமைச்சர் விஜயின் திரைப்பட உரையாடல்களையும் சுட்டிக்காட்டிய அவர், பெண்களின் உடை மற்றும் உடல்மீதான உரிமை குறித்து எதிர்மறையான கருத்துகளை வெளிப்படுத்திய கதாநாயகனைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளோம் என்று குற்றம்சாட்டினார். பெண்கள் தங்கள் சொந்த கால்களில் நின்று வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற செய்தியுடன் தனது உரையை முடித்தார்.
இதையும் படிங்க: வேடிக்கை பார்த்துவிட்டு ஹீரோயிசம் காட்டுவதா..?? பொங்கிய கனிமொழி.. சரமாரியாக எழுந்த கேள்விகள்!!