இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!
மறுஜென்மத்தில் நம்பிக்கை உள்ள எடப்பாடி பழனிசாமி. அடுத்த ஜென்மத்தில் தமிழகத்தில் பிறக்க வேண்டாம். குஜராத்தில் பிறந்து கொள்ளட்டும் என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்தார்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி (Kanimozhi Karunanidhi) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசிய அவர், மத்திய அரசையும் எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
பிரசார கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி, “சட்டமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்தது. மோடிக்கு இந்த மசோதாவில் தோல்வி தான் கிடைத்தது. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இந்த மசோதாவை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து கருப்பு நாள் என்று அறிவித்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவரின் சமீபத்திய பேச்சை குறிப்பிட்ட அவர், “எதிர்கட்சித்தலைவர் நேற்று சேலத்தில் பிரசாரம் செய்த போது அடுத்த ஜென்மத்தில் மனிதனாக பிறக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: படித்த மாணவனுக்கு ஃபெயில் மார்க் கொடுக்கும் பாஜக..! பிரேமலதாவை ஆதரித்து கனிமொழி பரப்புரை..!!
எனக்கு அடுத்த ஜென்மத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அப்படியே அவர் பிறந்தாலும் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டாம். பாஜகவுக்கு கை கட்டி நிற்கும் பழனிசாமி அடுத்த ஜென்மத்தில் குஜராத்தில் பிறந்து கொள்ளட்டும்” என கடுமையாக விமர்சித்தார்.
இந்த பேச்சு கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தல் சூழலில் இவ்வாறான கடுமையான அரசியல் விமர்சனங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாநில உரிமைகள், மத்திய-மாநில உறவுகள் போன்ற விஷயங்கள் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன.
திருச்செந்தூரில் நடைபெற்ற இந்த பிரசார கூட்டம், திமுக கூட்டணியின் வாக்குசேகரிப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளுக்கும் இது அரசியல் சவாலாக மாறியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில், முக்கிய தலைவர்களின் இந்த மாதிரியான கூர்மையான பேச்சுகள் வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை..! கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி..! மக்களவையில் கனிமொழி வாதம்..!