×
 

பசியோடு வந்த பிஞ்சு குழந்தைகள்! சமபந்தி போஜனத்தில் சாதி பார்த்த அவலம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் அண்ணா நினைவு நாளிலேயே ஏழைக் குழந்தைகளுக்கு உணவு மறுக்கப்பட்டது பெரும் அவலம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற அந்த நிகழ்வில் அரங்கேறிய இந்தச் செயல், நவீன தீண்டாமையின் உச்சம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் நடந்த இந்த அவலமானச் சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,சமநிலை சமுதாயம் காண இயக்கம் கண்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளிலேயே, அவருக்குத் தீராத அவமானத்தைத் தேடித்தந்துவிட்டது இந்த திமுக அரசு. நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற அன்னதான நிகழ்வில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கோயிலுக்குள் நுழையவும், உணவு உண்ணவும் அனுமதி மறுக்கப்பட்டதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்று சொன்ன அண்ணாவின் பெயரில் அன்னதானம் நடத்திவிட்டு, ஏழைக் குழந்தைகளை ஜாதியின் பெயரால் கண்ணீரில் ஆழ்த்தியதுதான் திமுக பேசும் சமூக நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து.. அடுத்தது என்ன?  பியூஷ் கோயலுடன் முக்கிய ஆலோசனை!

ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்திச் சரித்திரம் படைத்த திராவிட நிலத்தில், பட்டவர்த்தனமாகத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது கேவலமானச் செயல். பட்டியல் சமூகச் சிறுவர்களை "தீட்டு" என்று பார்த்து மிரட்டி அனுப்பியிருப்பதாக அந்தச் சிறுமி வேதனையோடு தெரிவிக்கும் காணொளியைக் காணும்போது கண் கலங்குகிறது. சபாநாயகர் முன்னிலையிலேயே இப்படிப்பட்ட ஒரு சமூக அவலம் நடந்திருப்பதற்குப் பொம்மை முதலமைச்சரும், பேரவைத் தலைவரும் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்த இயக்கம் அஇஅதிமுக. ஆனால், திமுக ஆட்சியிலோ பெயரளவில் மட்டுமே சமத்துவம் பேசப்படுகிறது.

இந்த வெட்கக்கேடானச் செயலுக்கு முதலமைச்சரும், சபாநாயகரும் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும், வழக்கம்போல அந்தச் சிறுவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து, போட்டோஷூட் நடத்தி அவர்களை மீண்டும் அவமானப்படுத்தாமல், அவர்களுக்கு முறையான நீதியைப் பெற்றுத் தருவதே நீங்கள் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும். அண்ணாவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் இந்தச் செயலைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது ஆண்டின் முதல்  கூட்டத்தொடர்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share