அறுந்த மின்கம்பிகளை தொடாதீர்கள்: பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் அவசர எச்சரிக்கை!
மழைக்காலத்தில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வரும் சூழலில், பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் காரணமாக மின்விநியோகக் கட்டமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மின்கசிவு மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கப் பொதுமக்களும் மின்வாரியப் பணியாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விரிவான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்வதையோ, அவற்றின் அருகே தேங்கியுள்ள மழைநீரில் இறங்குவதையோ பொதுமக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். தரையிலோ அல்லது தேங்கிய நீரிலோ அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை எக்காரணம் கொண்டும் தொடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது. இடி, மின்னலின் போது திறந்தவெளியிலோ, தனித்த மரங்களின் கீழோ நிற்காமல் பாதுகாப்பான கட்டிடங்களில் தஞ்சமடைய வேண்டும்; மின்சாதனங்கள் மற்றும் செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!
மேலும், ஈரமான சுவர்கள், ஈரக் கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களைத் தொடக்கூடாது; மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளைப் பொதுமக்கள் தாங்களாகவே அகற்ற முயற்சிக்காமல் மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளைக் கட்டுவதோ, துணிகளைக் காயவைப்பதோ கூடாது. விபத்துகளைத் தவிர்க்க வீடுகளில் தகுதியான மின்பணியாளர்களைக் கொண்டு ஆர்சிசிபி (RCCB) கருவியைப் பொருத்தி முறையான மின்காப்பு செய்ய வேண்டும். அறுந்த கம்பிகள், மின்தடை மற்றும் மின்கசிவு தொடர்பான அவசரப் புகார்களுக்கு 'மின்னகம்' சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ உடனடியாகத் தொடர்புகொள்ளலாம்.
மின்வாரியக் களப்பணியாளர்கள் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் உரிய அனுமதி பெற்று, மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதை உறுதிசெய்து, முறையான நிலஇணைப்பு (Earthing) செய்த பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம், மின்காப்புக் கையுறைகள், பாதுகாப்புக் காலணிகள் மற்றும் பாதுகாப்பு இடுப்புப்பட்டை உள்ளிட்ட உபகரணங்களைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
மழைநீர் தேங்கிய இடங்களில் மின்கசிவு ஆய்வுக்குப் பிறகே பராமரிப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும். அறுந்த கம்பிகள், சாய்ந்த மின்கம்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவமனைகள், குடிநீர் விநியோக நிலையங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அவசரகாலக் கருவிகள் மற்றும் வாகனங்களைத் தயார் நிலையில் வைப்பதுடன், ஊழியர்கள் தங்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பணிகளில் ஈடுபட வேண்டும்.
"மின்பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம்! மின்விபத்துகளைத் தவிர்ப்போம்! உயிர்களைக் காப்போம்!" என்ற விழிப்புணர்வுடன் பொதுமக்களும் மின்வாரிய ஊழியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!